எலைஜா ஜெ. மெக்காய் Elijah J. McCoy (1844 மே 2 – 1929 அக்டோபர் 10) என்றழைக்கும் இவர், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளராகவும், மற்றும் பொறியாளராகவும் கருதப்படுகிறார். மேலும், அவரது குறிப்பிடத்தக்க 57 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமை பெற்றவராகவும், பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) செய்யப்பட்டவராகவும் அறியப்படுகிறார்.
பிறப்பு:
வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில், 1844-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாளில் ஜார்ஜ், மில்டிரட் தம்பதியர்க்கு பிறந்த எலைஜா ஜெ. மெக்காய், ஐக்கிய அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.
ஆரம்பகால வாழ்க்கை:
சிறு வயது முதலே இயந்திரங்கள் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்த எலைஜாவின் பெற்றோர், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து தப்பி வந்த அடிமைகளாக இருந்துள்ளனர். மீண்டும், 1847-ல் அவரது குடும்பம் அமெரிக்கா சென்று மிச்சிகனில் குடியேறியது. அக்காலகட்டத்தில், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் படிப்பது சிரமம் என்பதால், அவரது பெற்றோர் 15 வயது மகனை இசுக்கொட்லாந்தின் எடின்பரோ நகருக்கு அனுப்பினர். அங்கு படித்து இயந்திரவியல் பொறியாளராக தகுதி பெற்று, ஊர் திரும்பிய மெக்காய் திறன்மிக்கவராக இருந்தும், கறுப்பினத்தவர் என்பதால் ஏற்ற வேலை கிடைக்கவில்லை. தற்காலிகமாக, மிச்சிகன் மத்திய ரயில்வே துறையில் தீயணைப்பு வீரராகவும், இயந்திரத்திற்கு (engine) எண்ணெய் (Oil) போடும் பணியாளராகவும் வேலை செய்தார்.
கண்டுபிடிப்புகள்:
எலைஜா, தனது பணியை மட்டுமே பார்த்துக்கொண்டிராமல், இயந்திரம் இயங்கும் முறையை ஆராய்ந்தவாறே இருந்தார். நீராவி இயந்திரங்களுக்கு எண்ணெய் (ஆயில்) இடுவதற்கான ‘எண்ணெய் சொட்டு கோப்பை’ (Oil-trip cup) என்ற தானியங்கி உயவிடுவான் (Automatic Lubricator) ஒன்றை கண்டறிந்தார். அது இயந்திரத்தின் ஓடும் பாகங்களில் சமமாக எண்ணெய் ஊடுருவுமாறு செய்தது. மேலும் இயந்திரம் சூடாகாமல், தடையின்றி தொடருந்து நெடுநேரம் தொடர்ந்தோட இது வழிவகுத்தது. அந்த எண்ணெய் சொட்டு கோப்பைக்கான காப்புரிமையை (காப்புரிமை எண் 120,843,) 1872-ல் சூன் 23-ம் நாளன்று ஐக்கிய அமெரிக்க நாட்டின் காப்புரிமை அலுவலகத்திடமிருந்து பெற்றார்.
இவரது கண்டுபிடிப்பு சாதாரணமானது என்றாலும், இது தொடர்வண்டிகளை விரைவாக ஓடச் செய்து, அஞ்சல், பொட்டலம் (Parcel) போன்ற சேவைகளை துரிதமாக்கி, அத்தொழிலையே லாபகரமாக மாற்றியது. தன் பொறியியல் திறனைப் பயன்படுத்தி இயந்திரங்களில் பல மேம்பாடுகளைச் செய்த மெக்காய். தொடர்ந்து தான் கண்டறிந்த கருவிகளை மேம்படுத்தினார்.
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இரும்புப் பலகை (ironing board), நீர் தெளிப்பான் (sprinkler), காலணிகளுக்கான குதிகால் மீள்மம் (Rubber Heel) என பலவற்றைக் கண்டறிந்ததோடு, அனைத்துக்கும் காப்புரிமை பெற்றார். இவர் கண்டறிந்த சாதனங்களில் 50-க்கும் மேற்பட்டவை உயவிடுவான் வகையோடு தொடர்பானவையாகும் .
அங்கீகாரம் மறுப்பு:
கறுப்பினத்தவரில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றுக்கான காப்புரிமை பெற்றவர் என்று போற்றப்பட்ட எலைஜா ஜெ. மெக்காய், பற்றிய குறிப்பு, 1909-ல் புக்கர் டி வாஷிங்டன் (Booker T. Washington) என்பவர் எழுதிய ‘ஸ்டோரி ஆஃப் தி நீக்ரோ’ (Story of the Negro) என்ற புகழ்பெற்ற நூலில் உள்ளது. அதேநேரம், கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, பெரிய அளவில் அங்கீகாரம் மறுக்கப்பட, அதைப் பற்றி கவலைப்படாத எலைஜா, ஏறக்குறைய 50 சாதனங்களுக்கு காப்புரிமை பெற்றார். தான் கண்டறிந்த உயவிடுவான் (Lubricator) சாதனங்களை உற்பத்தி செய்ய முதலீடு இல்லாததால், தனது முதலாளிகள், முதலீட்டாளர்களிடம் இவற்றுக்கான உரிமங்களை விற்றுவிட்டார். இதனால், இவர் கண்டறிந்த பல சாதனங்கள் பற்றிய குறிப்புகளில் கண்டுபிடிப்பாளராக இவரது பெயர் இடம்பெறவில்லை. இறுதியாக, தான் கண்டறிந்தவற்றை உற்பத்தி செய்வதற்காக 1920-ல் தன் பெயரில் ஒரு தொழிற்சாலை தொடங்கினார். அங்கு இவரது பெயர் தாங்கிய உயவிடுவான் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
இறப்பு:
வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தவரும், உயவிடல் நுட்பத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான எலைஜா ஜே.மெக்காய் ஒரு நான்கு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்தவர், அதில் இருந்து முழுமையாக குணமடையாமலே, ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ள மிச்சிகன் மாநிலம் டிட்ராயிட் பெருநகரில் 1929-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் தனது 85-வது அகவையில் மறைந்தார்.